“அகத்தியர் சௌமிய சாகரம்”

Vadha saumyam 1200 {பாகம் -2}

{கதிர்காம கந்தனின் அருளாசியுடன், அகத்தியர் பெருமானின் பாதங்களைபணிந்து தன்னுடைய சீடர்களுக்காக அகத்தியர் பெருமானால் உலகுக்கு அருளப்பட்ட இது வரை ஓலை வடிவிலேயே விளங்கிய அரிய பொக்கிசமாகிய இந்த #அகத்தியர் #சௌமிய #சாகரம் என்ற மிக பெரிய பொக்கிஷத்தை வாயிலாக உலகம் அறிந்து பயன் பெற அகத்தியர் பெருமானின் பாதம் பணிந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்… நமக்கு வேண்டிய எல்லா யோக ரகசியங்களையும் அகத்தியர் பெருமான் குருவாக இருந்து இங்கு கற்பிக்கிறார். புண்ணியவான்கள் கையில் மட்டுமே கிடைக்கும் பொக்கிஷம் இது.}

                ~~~~~~~~~~~~~~~~~~~

(31) அகத்தியர் சொல்லும் வாசி ரகசியம்.

காணவே ஐம்புலனை வகுத்துப் பார்த்துக்
கருவான ஆதார மூலத்தேகி
தோணவே வாசியுட நிலையைக் கண்டு
சுத்தமுடன் அவ்வாசி தன்னிலேறி
பூணவே அண்டவரைத் தன்னிற் சென்று
புத்தியுடன் சித்தமதாய் நின்றாயானால்
ஊணவே கரணம் அந்தக் கரணம் நாலும்
உண்மையுடன் சொல்லுகிறேன் உகந்து கேளே

இப்பாடலில் அகத்தியர், நாம் முதலில் நமது ஐம்புலன்களைப் பற்றி அறிய வேண்டும் என்கிறார். அதனை அடுத்து நமது கவனத்தை மூலாதாரத்தில் வைக்க வேண்டும் என்கிறார். அப்போது நமக்கு வாசியின் நிலை புலப்படும் என்கிறார். இதனால் புலன்களின் தாக்கத்தைக் கடந்ததால்தான் வாசி புலப்படும் என்பது தெரிகிறது. வாசி என்பது இப்பயிற்சியினால் எழும் குண்டலினி சக்தி என்பதும் தெரிகிறது. அதனை அடுத்து அந்த வாசியில் ஏறி அண்ட முகட்டை அடையவேண்டும் என்கிறார் அகத்தியர். அண்டம் என்பது ஐம்புலன்களால் அறியப்படும் உலகம். இதற்கு மனது தேவைப்படுகிறது. இதனால் அண்ட முகட்டை அடையும்போது நாம் மனதின் தாக்கத்திலிருந்து விடுபடுகிறோம் என்பது புரிகிறது. அதனால்தான் அகத்தியர் புத்தியும் சித்தமுமாக நின்றவேண்டும் என்று அடுத்து கூறுகிறார். புத்தி என்பது மனத்தால் அறியப்பட்டவற்றை ஆராயும் பகுதி, சித்தம் என்பது அவ்வாறு ஆராய்ந்து பெற்ற அறிவினால் ஏற்படும் உணர்வுகளை அனுபவிக்கும் பகுதி. இவையனைத்தும் அந்தக்கரணங்கள் அல்லது உட்கருவிகள் எனப்படும் நான்கின் பகுதிகளாகும். அதனால், தான் அடுத்து அந்த நான்கு கருவிகளைப் பற்றிப் பேசப்போகிறேன் என்கிறார் அகத்தியர்.

            ~~~~~~~~~~~~~~~~~~~

(32) அந்த கரணங்கள்.

கேளப்பா புலத்தியமா ரிஷியேஐயா
கிருபையுள்ள கரணம் அந்தக்கரணந் தன்னை
கோளடா இல்லாத மனம் தானொன்று
கூர்மையுடன் நின்றிலங்கும் புத்தி ஒன்று
தேரடா ஆங்காரம் ஆனதொன்று
சிவ சிவா சுத்த மென்ற சித்தமொன்று
ஆளடா கரணமென்ற கரணம் நான்கும்
அப்பனே அறிந்துகொண்டு வாற்றுமம் பாரே

ஞானேந்திரியங்களையும் கர்மேந்திரியங்களையும் பூதங்களையும் அவற்றின் சூட்சும குணங்களையும் பட்டியலிட்ட பிறகு அகத்தியர் அந்தக்கரணம் எனப்படும் மனத்தின் நான்கு நிலைகளை இப்பாடலில் கூறுகிறார். அவையாவன, அனைத்தையும் உணருவதான மனம், நன்மை தீமைகளைப் பகுத்தறியும் புத்தி, ஆங்காரம் எனப்படும் “தான்” என்னும் உணர்வு மற்றும் மனத்தின் தூய பகுதியான சித்தம் என்பவை. இவற்றில் அகங்காரம் என்பது மனம் மற்றும் புத்தி உணர்ந்தவற்றைத் தன்னுடன் தொடர்புபடுத்தி தனக்கு விருப்பமானது நன்மையானது அல்லது அவ்வாறு இல்லாத ஒன்று என்று உணருகிறது. சித்தம் என்பது பரவுணர்வு அல்லது சித்தின் பகுதி. தூய்மையான மனம். சித்தத்தை சித்தாக மாற்றுவதே சித்தர்களின் குறிக்கோள்.
இவ்வாறு மேற்கூறிய விஷயங்களை அறிந்து அடுத்து ஆத்மாவைப் பற்றி அறிந்துகொள் என்று அகத்தியர் புலத்தியரிடம் கூறுகிறார்.

            ~~~~~~~~~~~~~~~~~~~

(33) ஆத்ம தத்துவங்கள்.

பாரப்பா ஆத்தும தத்துவம் தானப்பா
பதிவாக இருபத்து நாலும் சொன்னேன்
நேரப்பா தானிருந்து ஆத்துமாவாம்
நிலையறிந்து பெற்றதினால் வாசியாகும்
காரப்பா வாசிநிலை கருவைக் கண்டு
கருவாக ஆத்துமத தத்துவத்தைப் பார்த்தால்
ஆரப்பா உனக்கு நிகர் உண்டோ பிள்ளாய்
அப்பனே வித்தியா தத்துவம் கேளே

இதுவரை அகத்தியர் ஆத்ம தத்துவங்கள் எனப்படும் 24 தத்துவங்களை விளக்கினார். அவை,
ஞானேந்திரியங்கள்- 5
கர்மேந்திரியங்கள் – 5
பூதங்கள் – 5
தன்மாத்திரைகள் – 4
மனத்தின் மாறுபாடுகள் – 4
என்பவை. இந்த ஆத்ம தத்துவத்தின் கருவையும் வாசியின் நிலையையும் ஒருவர் அறிந்தால் அவருக்கு ஈடானவர் இவ்வுலகில் இல்லை என்கிறார் அகத்தியர்.
இதனை அடுத்து அவர் வித்யா தத்துவங்களை விளக்கப்போகிறார்.

            ~~~~~~~~~~~~~~~~~~~

(34) வித்யா தத்துவம்.

கேளப்பா வித்தியா தத்துவத்தைச் சொல்வேன்
கேள் என்ன காலை என்றும் நியதி என்றும்
சூளப்பா கலைஎன்றும் வித்தை என்றுஞ்
சுகமான ராகம் என்றும் புருடன் என்றும்
நாளப்பா மாய்கை என்றும் எழுமாச்சு
நன்மையுடன் வித்தியா தத்துவத்தைப் பார்த்து
ஆளப்பா ஆதாரத் தேகந் தன்னை
அறிந்து கொண்டு சிவ தத்துவத்தைக் கேளே

அகத்தியர் இப்பாடலில் வித்யா தத்துவங்களை விளக்குகிறார். தத்துவம் என்பது தன்னிலிருந்து மற்றொன்றைப் பிறப்பிப்பது. அதனால்தான் ஆத்ம தத்துவம் என்பவை ஆத்மா அல்ல. ஆத்மா என்றும் நிலையாக இருப்பது, தன்னிலிருந்து மற்றொரு தத்துவத்தைப் பிறப்பிப்பதில்லை. புருடன் என்று வித்தியா தத்துவத்தில் குறிப்பிடப்படுவது ஆத்மா அல்ல. அது வித்யா தத்துவத்தால் மாயையினால் உருவாக்கப்படும் ஒரு நிலை. அதேபோல் வித்தியா தத்துவத்தில் சேர்க்கப்படும் மாயை சுத்த மாயை அல்ல.
மற்ற தத்துவங்களான காலம்- பகல், இரவு, நாள், மாலை, காலை என்று காலத்தின் அளவுக்குட்பட்டமையை ஏற்படுத்துவது. கலை- செயல்பாட்டில் அளவுக்குட்டமையை ஏற்படுத்துவது, ராகம்- விருப்பத்தில் அளவுக்கு உட்பட்டமைக்குக் காரணம், நியதி- அனுபவத்தில் அளவுக்குட்பட்டமையை ஏற்படுத்துவது, வித்யை- அறிவில் அளவுக்கு உட்பட்டிருப்பதை ஏற்படுத்துவது.
இவ்வாறு வித்தியா தத்துவத்தை விளக்கியபிறகு அகத்தியர் சிவ தத்துவங்களை விளக்கப்போகிறார்.

            ~~~~~~~~~~~~~~~~~~~

(35) சிவ தத்துவம்.

கேளடா சிவதத்துவந் தன்னை மைந்தா
கிருபையுள்ள புலத்தியனே நன்றாய்க் கேளு
ஆளடா சுத்த வித்தை ஈசுவரமும் மைந்தா
அப்பனே ச்தாக்கியமும் சத்தி சிவம் ஐந்துஞ்
சூளடா சிவதத்துவம் என்று பேரு
சுகமான தத்துவங்கள் முப்பத்தாறும்
வாளடா உடற்கருவி என்றும் பேரு
மைந்தனே தானறிந்து தன்னைப் பாரே

(1)சுத்த வித்யா, (2)ஈஸ்வரம், (3)சாதாக்கியம் அல்லது சதாசிவம், (4)சக்தி, (5)சிவம்
என்று சிவ தத்துவங்கள் ஐந்தாகும். இந்த ஐந்தும் பிற தத்துவங்கள் தொன்ருவதர்க்குக் காரணமாக இருப்பதால் தத்துவங்களாகின்றன.

இவ்வாறு சித்த மார்க்கத்தில் தத்துவங்கள் முப்பத்தாறு. 24 ஆத்ம தத்துவம், 7 வித்யா தத்துவம், 5 சிவ தத்துவம். இவையனைத்தும் உடற்கருவிகள் என்று அழைக்கப்படுகின்றன என்கிறார் அகத்தியர். இவை உடல் செயல்படுவதற்கும் பல அனுபவங்களைப் பெறுவதற்கும் காரணமாக இருப்பதால் கருவிகளாகின்றன.

            ~~~~~~~~~~~~~~~~~~~

(36) தத்துவங்கள் தோன்றிய விதம்.

பாரப்பா தன்னை மிகத்தானே கண்டு
பக்தியுடன் உள்கருவி மூலம் பார்த்து
நேரப்பா நின்றதினால் தத்துவத்தின் பெருமை
நீதியுடன் தோணுமடா நினைவாய்ப் பாரு
சாரப்பா மனசாரச் சார்ந்து பார்த்தால்
சார்வான தத்துவங்கள் தோணும் பாரு
ஆரப்பா அறிவார்கள் பூதமைந்தில்
அதிற்பிறந்த தத்துவந்தான் தொண்ணூற்றாரே

சித்த மார்க்கத்தில் தத்துவங்கள் 96 ஆகக் கருதப்படுகின்றன. அவற்றில் 36 பிரதம தத்துவங்கள் என்றும் மீதி 60 சார்வுத் தத்துவங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. சார்வுத் தத்துவங்கள் பிரதம தத்துவங்களிலிருந்து தோன்றுபவை. இவற்றை அவர் அடுத்த பாடலிலிருந்து விளக்கத் தொடங்குகிறார். பிரதம தத்துவங்களை ஒருவர் மனதால் கவனம் கொண்டு நோக்கினால் அவற்றிலிருந்துதான் சார்வுத் தத்துவங்கள் தோன்றுகின்றன என்பதைக் காணலாம் என்று அவர் கூறுகிறார்.

              ~~~~~~~~~~~~~~~~~~~

(37) நில தத்துவத்தில் தோன்றிய கூறுகள்.

ஆறான பூதம் ஐந்தின் விரிவைக் கேளு
அப்பனே பிரிதிவியின் கூர்தான்மைந்தா
நேரான மயிருடனே எலும்பு சிரமம்
நிலையான நரம்பு சதை ஐந்துமாச்சு
பேரான பிரிதிவியின் கூறைச்சொன்னேன்
பொறுமையுடன் தான் ஐந்துப் பிலமாய் நின்று
கூரான அப்புடைய கூறு பாரு
குணமான புலத்தியனே குவித்துப் பாரே.

அகத்தியர் இப்பாடலிலிருந்து சார்வுத்தத்துவங்களை விளக்கத் தொடங்குகிறார். முதலில் பிரிதிவி அல்லது நிலதத்துவத்திலிருந்து தொடங்கும் அவர் (1)முடி, (2)எலும்பு, (3)தோல், (4)நரம்பு, (5)சதை என்ற ஐந்தும் பூமி தத்துவத்திலிருந்து தோன்றுபவை என்கிறார் அவர்.
இதனை அடுத்து அவர் அப்பு அல்லது நீரின் கூறைக் கொண்ட தத்துவார்த்தங்களை விளக்குகிறார்.

                   ~~~~~~~~~~~~~~~~~~~

(38) நீர் தத்துவத்தில் தோன்றிய கூறுகள்.

பாரப்பா அப்புடைய கூறு சொல்வேன்
பதிவான நீருடனே உதிரம் அப்பா
காரப்பா சுக்கிலமும் மூளை மச்சை
கருவான ஐந்துமடா அப்பின் கூறு
தேரப்பா அப்பினுட கூறறிந்து
தெளிந்து மனதொன்றாகத் தன்னைப் பாரு
சாரப்பா தன் உணர்வாய்ப் பார்த்தால் மைந்தா
தயவான தேய்வினுட கூறு கேளே

(1)வியர்வை, (2)உதிரம், (3)சுக்கிலம், (4)மூளை, (5)மச்சை ஆகிய ஐந்தும் நீரின் கூறுகள் என்று கூறுகிறார் அகத்தியர். இவற்றை புலத்தியர் மனக்குவிப்போடு ஆத்மா அனுபவிக்கும் உணர்வுகளாகப் பார்க்கவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
இதனை அடுத்து தேயு அல்லது அக்னி தத்துவத்தின் கூறைக் கூறுகிறேன் என்கிறார்.

                  ~~~~~~~~~~~~~~~~~~~

(39) அக்கினி தத்துவத்தில் இருந்து தோன்றிய கூறுகள்.

கேளப்பா தேய்வினுட கூறு கேளு
கேள்வியென்ன பசியுடனே நித்திரையுமாகும்
கூளப்பா மைதுனம் பயமுஞ் சோம்பல்
தொகுத்துரைத்த ஐந்துமடா தேய்வின் கூறு
சூரப்பா தேய்வினுட கூறரிந்து
ஆக்கமுடன் தன்னகத்தை மனதாய்ப் பாரு
காலப்பா வலுவரிந்து பார்த்தாயானால்
கலையான வாய்வினுட கூறுதானே

அக்னி அல்லது நெருப்புத் தத்துவத்தின் கூறையுடைய ஐந்தை இப்பாடலில் அகத்தியர் பட்டியலிடுகிறார். அவை, (1)பசி, (2)தூக்கம், (3)மைத்துனம் அல்லது உடலுறவு, (4)பயம், (5)சோம்பல் என்பவை. நாம் பொதுவாக இவற்றைப் பற்றிப் பேசும்போது சுட்டெரிக்கும் ஆசை, பொசுக்கும் கோபம், தன்னையே உண்ணும் பசி என்பதுபோன்ற சொற்களைப் பயன்படுத்துவது இதனால்தானோ என்னவோ! இவையனைத்தும்- ஏரிப்பது, தகிப்பது என்ற அடைமொழிகள், தீக்கே பொருந்தும்.
அடுத்து அகத்தியர் வாயுவின் கூறைக் கொண்டவற்றை விளக்கப்போகிறார்…..

                   ~~~~~~~~~~~~~~~~~~~

(40) வாயு தத்துவத்தில் இருந்து பிறந்த கூறுகள்.

தானான வாய்வினுட கூறு கேளு
தன்மையுள்ள புலத்தியனே நடத்தல் ஓடல்
ஊனான இருத்தலொடு கிடத்தல் மைந்தா
உத்தமனே எழுதலொடும் ஐந்துமாச்சு
வாறான வாய்வினுட கூறறிந்து
மார்க்கமுடன் தன்னகத்தை மகிழ்ந்து பாரு
கோனான குருவருளால் பார்த்தாயானால்
குணமான ஆகாசக் கூறைக் கேளே

பிரிதிவியின் கூறு உடல் அங்கங்களான தோல், மயிர், எலும்பு போன்றவையாக இருக்க வாயுவின் கூறை உடையவை செயல்பாடுகளாக இருக்கின்றன. வாயுவின் தன்மை ஒரு இடத்தில் நில்லாமை அதனால் வாயுவின் கூறை உடையவையும் செயல்பாடுகளாக இருக்கின்றன. அவையாவன (1)நடத்தல், (2)ஓடுதல், (3)இருத்தல், (4)கிடத்தல், (5)எழுதல் என்ற ஐந்துமாகும்.
இதனையடுத்து தான் ஆகாயத்தின் கூறைக் கொண்டவற்றை விளக்கப்போகிறேன் என்கிறார் அகத்தியர்…..

                   ~~~~~~~~~~~~~~~~~~~

(41) ஆகாய தத்துவத்தின் கூறுகள்.

கூறாக ஆகாசக் கூறு தன்னை
குறியுடனே சொல்லுகிறேன் குணமாய்க்கேளு
நேராகக் குரோதமொடு லோபம் மோகம்
நிசமான வாச்சரிய மதமுமைந்து
ஊரான ஆதாரந் தன்னைப் பார்த்து
உத்தமனே தானாவாய் நின்றாயானால்
தேராக வாசியது தேரும் தேரும்
சிவபூதம் ஐந்து தொழில் இருத்தல் ஐந்து

(1)காமம், (2)குரோதம், (3)மோகம், (4)மதம், (5)மாச்சரியம் என்ற ஐந்து குணங்களும் ஆகாசத்தின் கூறை உடையவை என்கிறார் அகத்தியர். ஆகாய தத்துவம் பிற தத்துவங்களுக்கு அடிப்படையாக இருப்பது. அதேபோல் இந்த குணங்கள் செயல்களுக்கு அடிப்படையாக இருக்கின்றன. இப்பாடலில் அகத்தியர் மற்றொரு முக்கியமான விஷயத்தைக் கூறுகிறார்.
பூதங்கள் அனைத்தும் சிவனின் கூறு என்றும் அவற்றின் செயல்பாடு சக்தித் தத்துவம் என்றும் அவர் கூறுகிறார்.

                  ~~~~~~~~~~~~~~~~~~~

(42) தச நாடிகள்.

அஞ்சான ஐந்து பத்து நாடி தன்னை
அப்பனே சொல்லுகிறேன் அறிவாய்க் கேளு
துஞ்சாத இடையான பின் சுழினையாகி
துலங்குகின்ற காந்தாரி அத்தியோடு
மிஞ்சான அஸ்வனியும் அலம்புருடன்
வேகமுள்ள சூதமுடன் சிங்குவை பத்தும்
நெஞ்சார நின்றதோர் நாடிபத்தும்
நேர்மையுள்ள பிரிதிவியின் கதிதான் பாரே

இப்பாடலில் அகத்தியர் தச நாடிகள் எனப்படும் பத்து நாடிகளை விளக்குகிறார். அவை (1)இடை, (2)பிங்கலை, (3)சுழிமுனை, (4)காந்தாரி, (5)அத்தி, (6)அஸ்வனி, (7)ஆலம், (8)புருடன், (9)சூதம் மற்றும் (10)சிங்குவை என்பன. நாடிகள் என்பவை குழல்கள். அவற்றின் ஊடே பிராணன்கள் ஓடுகின்றன. அதனால் நாடிகள் பூமி தத்துவத்தின் கூறை உடையவை.

           ~~~~~~~~~~~~~~~~~~~

(43) நாடிகளினுடு ஓடும் வாயுக்கள்.

வளியான வாய்வினிட வழிதான் மைந்தா
மார்க்கமுடன் சொல்லுகிறேன் மனதாய்க் கேளு
நெளியாத பிராணனுடன் அபானன் தானும்
நிசமான உதானனுடன் சமானன் மைந்தா
அளியாத வியானனுடன் ஐந்துமப்பா
அரகரா தேய்வுடனே வாய்வு மாச்சு
சுளியாத தேயு வாயுவைத்தான் கண்டால்
சுகமாக பூத வாயுவைத் தான் கேளே

இப்பாடலில் அகத்தியர் தச நாடிகள் எனப்படும் பத்து நாடிகளை விளக்குகிறார். அவை இடை, பிங்கலை, சுழினை, காந்தாரி, அத்தி, அஸ்வனி, ஆலம், புருடன், சூதம் மற்றும் சிங்குவை என்பன. நாடிகள் என்பவை குழல்கள். அவற்றின் ஊடே பிராணன்கள் ஓடுகின்றன. அதனால் நாடிகள் பூமி தத்துவத்தின் கூறை உடையவை. முன்னம் கூறிய பூமி தத்துவத்தின் கூறையுடைய அசைவற்ற தத்துவங்களைப்போல (எலும்பு, தோல்..) இவை அசைவை உடையவை. அதனால் இவற்றை பிரித்திவி தத்துவத்தின் கதி என்கிறார் அகத்தியர்.

              ~~~~~~~~~~~~~~~~~~~

(44) தச வாயுக்கள்.

கேளப்பா நாகனொடு கூர்மன் மைந்தா
கிரிகரனும் தேவதத்தன் தனஞ்செயனாம் ஐந்தும்
ஆரப்பா ஐம்பூத வாயுவென்பார்
ஆச்சரியந் தச வாய்வை அறிந்துகொள்ளு
காலப்பா தசவாய்வை அறிந்து கொண்டு
கருணையுடன் சிவயோகக் கருத்தில் நின்றால்
கோளப்பா ஒன்றுமில்லை எல்லாஞ் சித்தி
குறிப்புடனே ஆகாச வழிதான் கேளே

முந்தைய பாடலின் தொடர்ச்சியாக உள்ள இதில் அகத்தியர் மீதம் உள்ள ஐந்து வாயுக்களைப் பற்றிப் பேசுகிறார். முக்கியமான வாயுக்கள் பத்து என்றால் எதற்காக அவற்றை இரண்டு கூறாகப் பிரிக்கவேண்டும்? அவற்றினிடைய உள்ள வேறுபாடு யாது? இதை இப்பாடல் நமக்கு விளக்குகிறது. முற்பாடலில் கூறிய ஐந்து- (1)பிராணன், (2)அபானன், (3)வியானன், (4)உதானன், (5)சமானன் என்பவை வாயுவின் கூறுடன் தேயு எனப்படும் அக்னியின் கூறையும் கொண்டவை. இப்பாடலில் கூறப்பட்டுள்ள ஐந்து- (6)நாகன், (7)கூர்மன், (8)கிரிகரன், (9)தேவதத்தன் மற்றும் (10)தனஞ்சயன், வாயுவின் கூறை மட்டும் கொண்டவை. அதனால் முதல் ஐந்தும் குண்டலினியின் எழுச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்போது இந்த ஐந்தும் உடலை அதற்குத் தகுந்த நிலையில் வைத்திருக்கின்றன. அதனால் தசவாயுக்கள் என்னும் இந்த பத்தும் சிவயோகத்துக்கு முக்கியமானவையாக உள்ளன.
இதனை அடுத்து அகத்தியர் ஆகாயத்தின் கதியை உள்ள தத்துவங்களை விளக்கப்போகிறார்.

            ~~~~~~~~~~~~~~~~~~~

(45) பற்றுகள்.

கேளடா ஆகாச வழிதான் மைந்தா
கிருபையுடன் சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு
வாளடா அர்த்த ஏடணை தான் ஒன்று
வகையான புத்திர ஏடணை தான் ஒன்று
சூளடா உலக ஏடணை தான் ஒன்று
சுத்தமுடன் ஆகாய வழியைக் கண்டு
ஆளடா அந்தரங்கச் சுழியில் நின்று
அப்பனே வாக்காதி அறிந்து பாரே

பாடல் 41ல் ஆகாயத்தின் கூறைக் கொண்டவை என்று அகத்தியர் காமகுரோதாதிகளைக் கூறினார். இப்பாடலில் ஆகாச தத்துவத்தின் அசைவை உடையவையான ஏடணைகளைக் குறிப்பிடுகிறார். ஏடணை என்பவை பற்றுக்கள். அவை செல்வத்தைக் குறித்த பற்று, புத்திரர்களைக் குறித்த பற்று மற்றும் உலகைக் குறித்த பற்று என்று மூன்று வகைப்படும். இந்த பற்றுக்களைக் கூர்ந்து நோக்கினோமானால் முன் கூறிய குணங்களினால் அவை பிறக்கின்றன என்பதைப் பார்க்கிறோம். இவற்றை சாதாரணமாகப் பிற பொருட்களைப் பார்ப்பதைப் போலப் பார்க்க முடியாது. யோக நிலையில் கவனத்தை உள்திருப்பும்போதுதான் அவை புலப்படுகின்றன. அதனால் அகத்தியர் புலத்தியரிடம் அவர் அந்தரங்க சுழி எனப்படும் சக்கரங்களில் நின்று அவற்றைப் புரிந்துகொள்ளுமாறு கூறுகிறார்.
இதனையடுத்து அவர் வாக்கு முதலிய ஐந்து செயல்களைக் கூறப்போகிறார்.

                 ~~~~~~~~~~~~~~~~~~~

(46) கர்ம இந்திரியங்களின் செயல்கள்.

பாரப்பா வாக்காதி என்னவென்றால்
பதிவான வசனமொடு கெமனந்தானம்
நேரப்பா விசர்க்கமொடு ஆனந்தம் ஐந்தும்
நிரமான வசனாதி என்றும் பேரு
காரப்பா வசனாதி ஐந்தும் கண்டு
கருவான ஆதார மூலம் பார்த்து
சாரப்பா பிரகிருது வழியைப் பார்க்க
தன்மையுடன் சொல்லுகிறேன் சங்கை கேளு

இப்பாடலில் அகத்தியர் கர்மேந்திரியங்களின் செயல்களைக் கூறுகிறார். அவை வாக்கு (வாயின் செயல்), நடை அல்லது கமனம் (கால்களின் செயல்), மலம் கழிப்பு (கழிவு உறுப்புக்களின் செயல்), ஆனந்தம்- உடலால் இன்பம் (லிங்கத்தின் செயல்) மற்றும் தானம்- கொடுக்கல் வாங்கல் (கைகளின் செயல்). கர்மேந்திரியங்கள் தத்துவங்கள் என்றும் அவற்றின் செயல்கள் தாத்துவிகங்கள் அல்லது சார்புத் தத்துவங்கள் என்றும் சித்தர் மரபில் அழைக்கப்படுகின்றன. இவற்றை ஒருவர் ஆதார மூலம் அல்லது மூலாதாரத்தில் நின்று பார்க்கவேண்டும் என்கிறார் அகத்தியர். இதனை அடுத்து அவர் பிரகிருதியின் கதியை விளக்கப்போகிறார்.

           ~~~~~~~~~~~~~~~~~~~

(47) முக்குணங்கள்.

கேளப்பா ராசதமுந் தாமதமும் மைந்தா
கிருபையுள்ள சாத்துவிகம் குணங்கள் மூன்றும்
வாளப்பா முக்குணங்கள் அறிந்துகொண்டு
வரிசையுடன் விந்தினுட வழியைக் கேளு
சூளப்பா பைசந்தி மத்திமை வைகரியுஞ்
சூக்குமையும் நாலுமிது வாக்கேயாகும்
ஆளப்பா வாக்காதி நாலும் பார்த்து
அரகரா ஆதாரந் தன்னைக் காணே.

இப்பாடலில் அகத்தியர் முக்குணங்களான (1)சத்துவம், (2)ரஜஸ், (3)தமஸ் என்ற மூன்றையும் முதலில் குறிப்பிடுகிறார். அதன் பிறகு விந்துவின் கதியான வாக்கைப் பற்றிக் கூறுகிறார். வாக் அல்லது பேச்சு பரா அல்லது சூட்சுமம், பஷ்யந்தி, மத்திமை மற்றும் வைகரி என்று நான்கு வகைப்படும். மேற்கூறிய தத்துவங்கள் அனைத்தும் ஒரு உருவத்துக்கும் அதன் செயல்பாட்டுக்கும் ஆதாரங்களாக இருக்கின்றன. இவற்றின் தன்மைகளை அடுத்த பாட்டில் அவர் விளக்குகின்றார்.

           ~~~~~~~~~~~~~~~~~~~

(48) தத்துவங்களின் தொகுப்பு.

காணப்பா ஆதராந் தன்னிலேதான்
கருவான உட்கருவி முப்பத்தாறும்
பூணப்பா புறக்கருவி அறுபதாச்சு
புத்தியுடன் உள் வெளியும் நன்றாய்ப் பார்த்தால்
தோணப்பா தத்துவங்கள் தொண்ணூற்றாறுந்
தோணுமடா இருதயத்தில் சூழ்ந்து பார்க்கில்
வீணப்பா ஒன்றுமில்லை தத்துவமாங் குப்பை
விளங்குபதி பசுபாசம் விளையாட்டாச்சே

இதுவரை பட்டியலிட்ட தத்துவங்களை அகத்தியர் இப்பாடலில் தொகுக்குகிறார். தத்துவங்கள் மொத்தம் 96. அவற்றுள் 36 உட்கருவிகள் 60 வெளிக்கருவிகள். அகத்தியர் அவையனைத்தையும் குப்பை, தண்டம் என்கிறார். அவை பசு, பதி, பாசம் என்ற விளையாட்டை நிகழ்த்துவதற்குத்தான் சரி என்கிறார் அகத்தியர்.

           ~~~~~~~~~~~~~~~~~~~

(49) சிவ சக்தி தத்துவங்கள் (96)

ஆச்சப்பா உட்கருவி முப்பத்தாறும்
அப்பே சிவத்தினுட கூறேயாச்சு
நீச்சப்பா புறக்கருவி அறுவதுதான்
நிசமான சக்தியுட கூறேயாச்சு
பேச்சப்பா உள்வெளியும் நன்றாய்ப் பார்த்து
பெருமையுடன் ஆதார நிலையுங் கண்டு
காச்சப்பா கருவி கரணாதி என்று
காடான தத்துவத்தைக் கண்டு தேரே

மொத்த தத்துவங்கள் 96ல் உட்கருவிகளான 36 தத்துவங்கள் சிவனின் கூறு என்கிறார் அகத்தியர். இந்த கருவிகள் வெளியிலிருந்து பெரும் அறிவினால் இயங்குகின்றன. வெளிக்கருவிகளான 60 சக்தியின் கூறு ஏனெனில் அவை செயல்பட்டு அறிவை ஏற்படுத்துகின்றன. இந்த சூட்சுமத்தை நன்கு அறிந்து கருவிகளையும் கரணங்கள் எனப்படும் மனத்தில் மாறுபாடுகளையும் நன்கு காய்ச்சுமாறு அகத்தியர் புலத்தியருக்குக் கூறுகிறார். அவ்வாறு செய்தால் காடு போல் வழிதவறி உலகில் உழலச் செய்யும் தத்துவங்களை அறிந்து தேறலாம் என்கிறார் அகத்தியர்.

           ~~~~~~~~~~~~~~~~~~~

(50) சக்கரங்கள், யோகங்கள்.

தேரப்பா சரிதையுடன் கிரிகை ரெண்டுஞ்
சிவசிவா சத்தியுட கூறேயாச்சு
காரப்பா யோகமுடன் ஞானம் ரெண்டும்
கருவான சிவத்தினுட காலேயாச்சு
நேரப்பா சிவரசம் அந்தங் கண்டு
நெறிமுறமை தவறாமல் அந்தம் பார்த்து
சாரப்பா சதுரகிரி பொதிகை தன்னில்
சங்கையுடன் நின்று தவந்தானே செய்யே

தத்துவங்கள் அல்லது கருவிகளைப் பற்றி விவரித்துவிட்டு, அவை குப்பை, பதி, பசு, பாசம் என்ற விளையாட்டுக்குத் தான் லாயக்கு என்று கூறிய அகத்தியர் பரவுணர்வைப் பெற ஆகமங்கள் பரிந்துரைக்கும் சரியை, கிரியை,யோகம் ஞானம் என்ற நான்கு படிகளைப் பற்றிப் பேசுகிறார். இவற்றில் முதல் இரண்டு- சரியை, கிரியை என்பவை செயல்பாடுகள். அதனால் அவை சக்தியின் கூறுகள். யோகமும் ஞானமும் மனத்தால் மேற்கொள்ளப்படுபவை. அவை சிவனின் கூறுகள் என்கிறார் அகத்தியர். இவற்றை மேற்கொண்டால் ஒருவர் சிவரசம் எனப்படும் சிவ அனுபவத்தை சமாதியில் பெறுவார். ஆனால் அதுவே முடிவு நிலையல்ல. அதனால் அந்தங்கள் எனப்படும் துரிய நிலைகளை அனுபவித்து, அவற்றைக் கடந்து பரநிலையைப் பெற்று அதன் அந்தத்தையும் பார்த்து முடிவில் சர்வ வியாபகத்தை அடையவேண்டும் என்று புலத்தியரிடம் கூறுகிறார் அகத்தியர். இதற்கு புலத்தியர் சதுரகிரி பொதிகையை அடைந்து தவம் செய்யவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார். சதுரகிரி பொதிகை என்பது கண்டமூலத்தையும் மூலாதாரத்தையும் குறிக்கும். இதனால் அகத்தியர் புலத்தியரைக் குண்டலினி யோகத்தை மேற்கொள்ளச் சொல்கிறார் என்று நாம் புரிந்துகொள்கிறோம்.

           ~~~~~~~~~~~~~~~~~~~

(51) உடற்கூறு.

தானான தேகமதில் கூடிநின்ற
சங்கைகளைச் சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு
ஊனன ரோமமது மூன்றரையாங்கோடி
உத்தமனே நாடியது எழுபத்தீராயிரமாங்
கோனான தேகமடா பலமோ ஆயிரமாங்
கொள்கியத்தில் குடல்பலந்தான் நாற்பத்தைந்து
பூனான பல்லதுவும் பலந்தான்நாலு
பொருந்திநின்ற சதைபலமும் இருநூறாச்சே

இப்பாடலிலிருந்து அகத்தியர் உடலின் பல பகுதிகளைப் பற்றி விளக்கப் புகுகிறார். உடலில் உள்ள மயிர்க்கால்கள் மூன்றரைக் கோடி என்று தொடங்கும் அவர் நாடிகள் எழுபத்திரண்டாயிரம் என்கிறார். உடல் ஆயிரம் பலம் என்றும் குடல் நாற்பத்து இரண்டு பலம், பற்கள் நான்கு பலம், சதை இருநூறு பலம் என்றும் அவர் கூறுகிறார்.

               ~~~~~~~~~~~~~~~~~~~

(52) உடல் கூறின் ரகசியம்.

ஆச்சப்பா உப்பதுவும் பலந்தான் ஐந்து
அப்பனே மச்சையது பலந்தான் நாலு
நீச்சப்பா ஈரலது பலந்தான் எட்டு
நிசமான அஸ்தியதைச் சொல்லக் கேளு
காச்சப்பா பலமும் நூற்றிருபதாச்சே
கூட்டி நின்ற சேவுடுமந்தான் நாழியாகும்
பேச்சப்பா பித்தமது படிதான் காலாம்
பலமான சுக்கிலந்தான் அரைக்காலாகும்

பல வலைத்தளங்கள் தமிழரது அளவைகளைத் தருகின்றன. இங்கு ஒரு பலம் என்பது முப்பத்தைந்து கிராம் ஒரு நாழி அல்லது ஒரு படி என்பது 1444 மில்லி லிட்டர் என்பதைத் தெரிந்துகொண்டால் போதும்.
இப்பாடலில் அகத்தியர் ஒருவரது உடல் ஆயிரம் பலம் என்று கொண்டால் (முப்பத்து ஐந்து கிலோ) அதில் ஈரல் இருநூற்று என்பது கிராம், எலும்பு நான்கு கிலோ என்றும் உடலில் உள்ள திரவங்களில் கபம் அல்லது சிலேஷ்மம் ஒரு படி என்றும் பித்தம் கால் படி என்றும் விந்து அரைக்கால் படி என்றும் கூறுகிறார்.

           ~~~~~~~~~~~~~~~~~~~

(53) உடலின் வாசல்கள்.

ஆச்சப்பா சர்மமது என்னவென்றால்
அப்பனே பலம் நூற்றிப் பதினாலாச்சே
தாமப்பா இப்படித்தான் கூடிநின்று
சரீரமத்தில் வாசலது எட்டுமாச்சு
நாமப்பா சொல்லுகிறோம் நன்றாய்க் கேளு
நாடிநின்ற கோபுரத்தின் வாசல் ஒன்று
ஓமப்பாஅவ்வாசல் ஒன்பதுக்கு
உண்மையுள்ள ஆதாரக் கதவைப் பாரே

இவ்வாறு உடலில் சர்மம் அல்லது தோல் நூற்றிப் பதினான்கு பலம் என்று முடிக்கிறார் அகத்தியர். இதனை அடுத்து இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள உடலில் எட்டு வாசல்கள் உள்ளன என்கிறார் அவர். இந்த எட்டு வாசல்களைத் தவிர்த்து ஒரு ஒன்பதாம் வாசல் உள்ளது என்றும் அந்த வாசலையே ஒருவர் நாடவேண்டும் என்றும் அவர் கூறுகிறார். இந்த வாசலை அவர் கோபுர வாசல், ஆதார வாசல் என்று குறிப்பதனால் இது மூலாதாரம் என்று தோன்றுகிறது.
பொதுவாக உடலுக்கு ஒன்பது வாசல் என்று கூறுவது வழக்கம். அவை இரு கண்கள், இரு நாசித்துவாரங்கள், இரு காதுகள், ஒரு வாய், ஒரு பிறப்புறுப்பு மற்றும் ஒரு கழிப்புறுப்பு. ஒருவேளை அவர் பிறப்புறுப்புக்கு அருகில் இருக்கும் மூலாதாரத்தைத் தனியாகக் குறிப்பிடுவதனால் எட்டு என்ற எண்ணிக்கையில் அவர் பிறப்புறுப்பைச் சேர்த்துக்கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.

           ~~~~~~~~~~~~~~~~~~~

(54) ஆதார சக்கரங்களை திறக்கும்.

பாரப்பா ஆதாரக் கதவைச் சாற்றி
பலபலவாய் நின்றதொரு தாளைப் பூட்டி
நேரப்பா அப்பூட்டுத் தனக்கு மைந்தா
நிசமான சுழினையே கோல்தான் அப்பா
அறிந்து மிகத் தான் நிறுத்துப் பார்க்கும்போது
வீரப்பா கொண்டதொரு ஆறாதாரம்
விபரமுடன் தோணுதற்கு விபரங்கேளே

எதனால் ஆக்ஞா சக்கரம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்று அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார். அவர் ஆறு ஆதாரங்களைக் பூட்டுக்கள் கொண்ட கதவுகள் என்றும் அந்தக் கதவுகளைத் திறக்க பயன்படும் திறவுகோல் ஆக்ஞா அல்லது சுழினை என்றும் கூறுகிறார். இதனை அடுத்து அவர் ஆறு ஆதாரங்களை விளக்கப்போகிறார்.

                ~~~~~~~~~~~~~~~~~~~

(55) மூலாதார சக்கரம்.

கேளப்பா விபரமென்ன மூலாதாரங்
கிருபையுடன் கண்டுகொள்ள வகையைக் கேளு
காலப்பா தோன்றி நின்ற மூலாதாரம்
கருணையுடன் சொல்லுகிறேன் அண்டம் போலாம்
மேலப்பா அண்டமதிற் சூழ்ந்து நின்ற
விசையான இதழதுதான் நாலுமாச்சு
சூளப்பா நிறமதுதான் மாணிக்கம் போல்
சுகமாக நின்றுதடா மூலம் பாரே

மூலாதாரமே கால் அல்லது பிராணன் தோன்றும் இடம், அது அண்டம் போல் இருக்கும் என்கிறார் அகத்தியர். அண்டம் என்பது ஒரு கோளம் மற்றும் உலகம் என்று பொருள்படும். இதன் இதழ்கள் நான்கு என்று கூறும் அகத்தியர் அதன் நிறம் மாணிக்கம் என்கிறார்.

              ~~~~~~~~~~~~~~~~~~~

(56) மூலாதார ரகசியங்கள் தொடர்கிறது…

பாரப்பா மூலமென்ற முட்டைக்குள்ளே
பதியான அக்ஷரந்தான் ஓங்காரமாச்சே
நேரப்பா நின்ற ஓங்காரத்தோடே
நிசமான ரீங்காரம் உகாரங் கூட்டி
சாரப்பா தன்மனமே சாக்ஷியாக
தன்மையுடன் தானிருந்து செபிப்பாயாகில்
காரப்பா கணபதியும் வல்லபையுமைந்தா
கனிவாக உந்தனிடம் கனிவார் காணே

முந்தைய பாடலில் அகத்தியர் மூலாதாரத்தின் அமைப்பைக் கூறினார். இப்பாடலில் அதைக் காண்பதற்கான வழிமுறையைத் தருகிறார். சரியான தன்மையுடன் இருந்து ஒருவர் “ஓம்-ரீம்-உம்” என்று மனதினுள் ஓதினால் கணபதியும் அவரது துணைவியார் வல்லபையும் அவருக்கு அருள் புரிவார் என்கிறார் அகத்தியர்.

              ~~~~~~~~~~~~~~~~~~~

(57) மூலாதார சக்கரத்தை திறப்பதால் கிடைக்கும் பயன்….

காணடா கனிவாகக் கண்டாயானால்
கருணையுள்ள சிவலோகம் உறுதியாச்சு
பூணடா சிவயோகம் உறுதியானால்
பொற்கமலம் உச்சியிலே தீபங்காணும்
பேணடா தீபமதை தினமும் நோக்கிப்
பிசகாமல் வாசியிலே பிலமாய் நில்லு
தோணடா அவ்வாசிப் பிலமாய் நின்றால்
சுக சீவ பிராண கலை சுத்தமாச்சே

மூலாதாரத்தை எவ்வாறு பார்ப்பது என்று முந்தைய பாடலில் கூறிய அகத்தியர் இப்பாடலில் அவ்வாறு செய்வதனால் வரும் பலனைக் கூறுகிறார். இந்தப் பயிற்சியை அவர் சிவயோகம் என்கிறார். இந்த சிவயோகம் உறுதிப்பட்டால் சிவலோகத்தைப் பெறுவது உறுதி என்கிறார். இந்தப் பயிற்சியை ஒருவர் தினமும் செய்து வாசியில் நின்றால் பொன்கமல உச்சியில் சோதி தெரியும் என்கிறார். இங்கு ஆத்ம தரிசனத்தைப் பற்றிப் பேசுவதால் இது ஆக்ஞை என்று தோன்றுகிறது. இதனால் சீவகலை தூய்மையடையும் என்கிறார் அவர்.

               ~~~~~~~~~~~~~~~~~~~

(58) சுவாதிஷ்டான சக்கரம்.

சுத்தமுடன் ஆதார மூலஞ் சொன்னேன்
சுவாதிஷ்டானத்தினுட சுகத்தைக் கேளு
பதமுடன் நாற்கோணம் இதழ்தான் ஆறு
பதிவான பொன் நிறம்போல் இருக்கும் மைந்தா
சுத்தமுள்ள நாற்கோணம் நடுவிலே தான்
தெளிவான நகாரமென்ற தீபமேத்தி
நித்தமுமே நகாரமுடன் சிவறீங்கிட்டு
நிலையறிந்து உருச்செபிக்க நிசத்தைக் கேளே

இப்பாடல் சுவாதிஷ்டானம் என்று குறிப்பிட்டாலும் சில பகுதிகள் மூலாதார சக்கரத்தைப் போல உள்ளன. தந்திரங்கள் மூலாதாரத்தை சதுரமாகக் குறிப்பிடுகின்றன. இங்கு அகத்தியர் சுவாதிஷ்டானத்தை சதுரம் என்கிறார். அதன் உள்ளே இடவேண்டிய எழுத்து நகாரம் மற்றும் சிவ ரீங்காரம். தந்திரத்தில் குறிப்பிடப்படும் எழுத்து வம் என்பது. அகத்தியர், அந்த சதுரத்தைச் சுற்றி ஆறு இதழ்கள் உள்ளதாகக் கூறுகிறார். தந்திரமும் சுவாதிஷ்டானத்தை ஆறு இதழ்களுடன் வரைகிறது. சுவாதிஷ்டானமே ஆத்மாவின் இருப்பிடம் என்றும் மூலாதாரத்தில் அதன் கர்மங்கள் உள்ளன என்றும் இந்த இரு சக்கரங்களும் சேர்ந்திசைந்து குறிப்பிட்ட குணங்களையுடைய ஒரு மனிதனாகப் பிறக்கின்றன. மூலாதாரப் பயிற்சி மூலம் ஜீவகலையைத் தூய்மைப் படுத்திய பிறகு ஏற்படும் அனுபங்களை அகத்தியர் இதன்மூலம் குறிப்படுகின்றார் என்று நாம் கருதலாம்.
கோபிநாத கவிராயர் என்பவர் நவநாத சித்தர்களில் ஒருவரான கோரக்கரின் சக்கரங்களைப் பற்றிய விளக்கங்கள் தந்திரத்தில் குறிப்பிடப்படும் விளக்கங்களிலிருந்து வேறுபட்டுள்ளன என்கிறார். அதேபோல் அகத்தியரின் விளக்கங்களும் வேறுபடுகின்றன.

              ~~~~~~~~~~~~~~~~~~~

(59) சுவாதிஷ்டான சக்கர ரகசியம் தொடர்கிறது…

கேளடா நிலையறிந்து வாசிகொண்டு
கீழ் மேலும் நன்றாக நின்றுபாரு
சூளடா நின்றநிலை பார்க்கும்போது
சோதியொன்று தோணுமடா பிரம சொரூபம்
ஆளடா பிரம்ம நிலை ரூபங்கண்டால்
அடங்காத வாசியது அடங்கும் வீட்டில்
காலடா வாசியது அடங்கி நின்றால்
கண்ணடங்கா பூரணத்தைக் காணலாமே

மூலாதாரத்தில் செய்யவேண்டிய பயிற்சிகளின் மூலம் சீவகலையைத் தூய்மைப்படுத்திய ஜீவன் சுவாதிஷ்டான சக்கரப் பயிற்சியின் மூலம் பிரம்ம சொருபத்தைப் பார்க்கிறது என்கிறார் அகத்தியர். இந்த அனுபவத்தைப் பெற வாசி உதவுகிறது. வாசி என்பது வெறும் மூச்சுப் பயிற்சி அல்ல. அது பிரபஞ்ச சக்தியை சுவாசத்தின் மூலம் உள்ளிழுப்பது. சுவாசத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் வாசி கட்டுக்கொள் கொண்டுவரப்படுகிறது. அதனால்தான் இந்த சுவாதிஷ்டானப் பயிர்சியில் அது வீட்டில் அடங்குகிறது என்கிறார் அகத்தியர். வாசி அடங்குவது என்பது கும்பக நிலை, உள்மூச்சு வெளிமூச்சற்ற நிலை. இந்த நிலையில் ஜீவன் பரம்பொருளை பிரம்ம சொரூபத்தை பரிபூரணத்தைப் பார்க்கிறது என்கிறார் அவர். இந்தக் காட்டி கண்ணுக்குள் அடங்காதது என்றும் அவர் கூறுகிறார்.

                   ~~~~~~~~~~~~~~~~~~~

(60) மணிபூரக சக்கர ரகசியம்.

காணவே பிரம்மாவின் பதியைச் சொன்னேன்
கருவான மணிபூரகங் கருத்தைக் கேளு
தோணவே பிறை மூன்றாம் பிறை போற்கீறித்
துலங்க அதில் ஈரைந்து பத்தும் போட்டு
பேணவே நிரமதுதான் பளிங்கு போலாம்
பிறை மூன்றாம் பிறை நடுவே மகாரமிட்டு
பூணவே சங்கிலி மங்கென்றேதான்
பூரணமாய்த் தினம் நூறு செபித்துக்காரே

முந்தைய பாடலில் அகத்தியர் சுவாதிஷ்டான சக்கரத்துக்கான பயிற்சியைக் குறிப்பிட்டு அதைச் செய்பவர் பிரம்ம சொரூபத்தைக் காண்பர் என்றார். இப்பாடலில் அவர் சுவாதிஷ்டானம் பிரம்மாவின் இருப்பிடம் என்கிறார். அவரது விளக்கம் நவநாத சித்தர் கோரக்கநாதரின் விளக்கத்தை ஒத்திருக்கிறது. இப்பாடலில் அகத்தியர் மணிபூரக சக்கரத்தை விளக்குகிறார். இந்த சக்கரப் பயிற்சிக்கு மூன்றாம் பிறையைப் போன்ற பிறையை நடுவில் வரைந்து அதன் மத்தியில் மகாரத்தை இடவேண்டும். அதனைச் சுற்றி பத்து இதழ்களைப் போட்டு நடுவில் மகாரத்தை இட வேண்டும். மகாரத்துடன் “சங்-கிலி-மங்” என்று நூறுமுறை செபிக்கவேண்டும் என்கிறார் அவர். மனிபூரகத்தின் நிறம் பளிங்கு என்கிறார். இதன் மூலம் அகத்தியர் விளக்கும் முறைகள் தமிழ் சித்தர்களின் தனிப்பட்ட முறைகள் என்பது புரிகிறது.

அகத்தியர் அறிவுரை!

“பொறுத்திரு…!
எல்லாவற்றுக்கும் காரணம்
உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா…..
பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்…..
ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள்…
இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.”

!ஓம் அகத்தீஸாய நமஹ!

தொடரும் அகத்தியர் பெருமானை நோக்கிய இந்த ஆழமான உண்மை பயணம்.

Similar Posts