அபிராமி அந்தாதி
கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும்,
கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும், அன்பு அகலாத கணவனும் தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும்,
தடைகள் வாராத கொடையும், தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு துன்பம் இல்லாத வாழ்வும் துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய், அலை ஆழி அறிதுயிலும் மாயனது தங்கையே, ஆதி கடவூரின் வாழ்வே, அமுத ஈசர் ஒரு பாகம் அகலாத சுக பாணி அருள்வாய் அபிராமியே!
-அபிராமி பட்டர்
அபிராமி அன்னையே, அலைகடலில் உறங்கும் மாயன் திருமாலின் தங்கையே, பழமை நிறைந்த திருக்கடவூரின் வாழ்வே, அமுத ஈசன் உன்னை விட்டு விலகாமல் எப்போதும் ஒருபக்கம் பொருந்தியிருக்கிறவளே,
1.கலையாத கல்வி
2.நீண்ட ஆயுள்
3.வஞ்சகம் இல்லாத நட்பு, நண்பர்கள்
4.நிறைந்த செல்வம்
5.என்றும் இளமை
6.நோயற்ற உடல்
7.சலிப்பற்ற மனம்
8.அன்பு நீங்காத மனைவி / கணவன்
9.குழந்தைப் பேறு
10.குறையாத புகழ்
11.சொன்ன சொல்லைக் காப்பாற்றும் தன்மை
12.பிறருக்குக் கொடுக்கும் எண்ணம், அப்படிக் கொடுப்பதற்குத் தடைகள் இல்லாத சூழ்நிலை
13.நிலைத்த செல்வம்
14.நேர்மையாக ஆட்சி செய்யும் அரசன் (தான் நேர்மையாக வாழ விரும்பும் உள்ளம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்)
15.துன்பம் இல்லாத வாழ்க்கை
16.உன்மேல் எப்போதும் அன்பு
இந்தப் பதினாறு செல்வங்களையும் எனக்குத் தருவாய், அதோடு, உன்னுடைய பக்தர்களுடன் என்றென்றும் கலந்து பழகி மகிழும் வரத்தையும் அருள்வாய்!
ஒரிஜினல் அபிராமி அந்தாதி அபிராமி பதிகம் பாடியவர் பாம்பே சாராதா ABIRAMI ANTHATHI