சுவாசத்தை அறிந்து உணர்..
யோக சாதனை செய்பவரின் மூல மந்திரமாக மூச்சை கவனி என்கின்ற வாக்கியமே உபதேச மந்திரமாக என்றென்றும் இருக்கின்றது..
மூச்சை கவனி என்ற வாக்கியமே முதலாவதாகவும் முடிவதாகவும் மிக மிக முக்கியமானதாகவும் அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது..
மேலும், மூச்சை கவனித்தால்
மோட்சம் கிட்டும் என்றும்,
மூச்சை கவனித்தல் மூவுலகையும் ஆளலாம் என்றும்,
மூச்சைக் கவனித்தால் மட்டுமே
தன் நிலையை உணரமுடியும் என்றும்,
மூச்சைக் கவனிப்பதே
முதல்நிலை யோகம் என்றும்,
உன்னுள் உயிராய் இருக்கின்ற மூச்சை கவனித்தால் உயர்ந்த நிலை அடைவாய் என்றும்,
இப்படி பலரால் பல விதமாக மூச்சை கவனிப்பதின் பெருமையை உபதேசமாக செய்த போதிலும் முறையாக மூச்சை கவனிக்கும் முறைகள் இன்னும் ரகசியமாகவே இருக்கின்றது..
சித்தர்களின் பார்வையில்
மூச்சை கவனிக்கும் பயிற்சியின் விளக்கம்
மூச்சை கவனிக்கும் பொழுது நமது மனமானது சிறிது நேரம் சுவாசத்தின் இயக்கத்தை சிந்தனை செய்து கொண்டிருக்கும்
அதன்பின் சிந்தனையில் மாறுபாடு ஏற்பட்டு வேறொரு நினைவு மனதில் உண்டாகிவிடும்
இப்படி மனதின் நிலை இரு வேறாக இருக்க மனதை மூக்கின் மேல் நிலை நிறுத்துவது எப்படி என்பதையும் மனதை மூச்சின் மேல் நிலை நிறுத்துவது எவ்வாறு என்பதையும் தெரிந்து கொள்வோம்..
நாம் கவனித்தாலும் கவனிக்காமல் இருந்தாலும் சுவாசம் மூக்கின் வழியாக இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது இது இயற்கையின் விதி..
ஆனால்,
இந்த மூச்சின் இயக்கமானது நாம் கவனித்தபடி இயங்க வேண்டும் இதுதான் யோகத்திற்கான வழி..
ஆக,
நிற்காமல் தொடர்ந்து நடைபெறும் நமது சுவாசமானது நம் நினைவில் நிற்கும்படி நடத்த வேண்டும்..
அதற்கான வழியாதெனில்
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு பதினைந்து முறை சுவாசிக்கிறான்
அப்படியானால்,
ஒருமுறை சுவாசிப்பதற்கு நான்கு வினாடிகள் தேவைப்படுகிறது இதுதான் மூச்சு எனும் சரவோட்டத்தின் கால கணக்காகும், முக்கியமாக இந்த விஷயத்தை மனதில் பதித்துக் கொள்ளுங்கள்
இப்போது,
மூச்சை கவனிக்கும் முறையை பார்ப்போம்..
உள்ளே சென்ற மூச்சானது உடனே வெளியே திரும்பும்
அதைப்போல,
வெளியே திரும்பிய மூச்சானது உடனே உள்ளே செல்லும்
இதுதான் சுவாசத்தின் இயல்பான நடைமுறையாகும்
இயல்பாக நடக்கும் இந்த சுவாச முறையில் சிறிது மாற்றம் செய்தால் போதும் நமது மனதை எப்பொழுதும் நமது மூச்சை மட்டுமே கவனிக்கும் படி செய்ய முடியும்
எவ்வாறெனில்,
நாம் எப்போதும் வழக்கமாக எப்படி சுவாசிக்கின்றோமோ அதை போல
இயல்பாக சுவாசித்து உள் சென்ற மூச்சுக் காற்றை உடனே வெளியே விடாமல் ஒரு வினாடி பொழுது உள்ளேயே நிறுத்தி வைத்து,
ஒரு வினாடி கழிந்தபின் உள்ளே நிறுத்திய உயிர் மூச்சை வெளியே விட்டு
வெளியே விட்ட சுவாசத்தை உடனடியாக உள்ளே இழுக்காமல் ஒரு வினாடி பொழுது வெளி புறத்திலேயே நிறுத்தி
ஒரு வினாடி கழிந்தபின் வெளியே நிறுத்திய உயிர் மூச்சை உள்புறமாக சுவாசிக்க வேண்டும்..
இப்படி செய்தால் நம்மை அறியாமல் நமக்குள் சுவாசத்தின் இயக்கம் நடைபெறாது..
இதுதான் நம் மனதை மூச்சை கவனிக்கும்படி செய்ய வைக்கும் முறையான பயிற்சி முறையாகும்..
இந்தப் பயிற்சி முறை செய்வதின் நோக்கம் யாதெனில்,
இயல்பாக சுவாசிக்கும் பொழுது ஒரு நிமிடத்திற்கு பதினைந்து முறை சுவாசிப்போம்..
இந்த பயிற்சி முறையை கடைபிடித்தால் இதில் மாற்றம் உண்டாகும் பதினைந்து முறை சுவாசிப்பது பதினான்கு முறையாக குறைந்துவரும்
இப்படி பழகி வந்து உள்ளே வெளியே நிறுத்தும் ஒருவினாடி பொழுதை இரண்டு வினாடி பொழுதாக மாற்றி இந்த சுவாச முறையை பழகி வந்தால் நமக்குள்ளே பல அற்புத மாற்றங்கள் நிகழும்
மூச்சை கவனிக்க வைக்கும் நோக்கம் யாதெனில்,
மூச்சை குறைத்து ஆயுள் மற்றும் பேரறிவை வளர்த்து கொள்வதற்காகவே, இதுதான் சித்தர்களின் உபதேசமாகும்
இதற்கான பலன்கள்
அவரவர்களின் அனுபவத்தில் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்
இதற்கான விளக்கம்
யோகப் பயிற்சியின் மூலம் கிடைக்கும் உயர் நிலையான ஞானம் என்பது அவரவர்களின் அனுபவ உணர்வால் உணர்ந்து கொள்வதே
இது அடுத்தவரின் உபதேசத்தால் அறிந்துகொள்வது அல்ல
குறிப்பாக யார் எதை விரும்புகின்றார்களோ அவர்களுக்கு அதுவே கிடைக்கப் பெறும்
இது சித்தர்களின் வாக்கு..