வேல் மாறல் மகா மந்திரம்
வினைகள் தீர்க்கும் வேல்மாறல்!
பஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடைத்து, அந்த யந்திரங்களைப் பூஜை செய்வதால் உயர்ந்த பலன்கள் கிடைக்கும் என்பார்கள் பெரியோர்கள். அந்த முறையில் இந்த ‘வேல்மாறல்’ அமைப்பையும் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் உருவாக்கியுள்ளார்.
வேல்மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு என்ற ஏகாக்ர சித்தத்தை உண்டாக்கும் வல்லமை உடையது. பொதுவாக மன ஒருமைப்பாட்டுடன் மந்திரங்களை உச்சரித்து வழிபடும்போது உண்டாகிற அதிர்வு அலைகளை வேல் மாறல் பாராயணத்தில் உணர முடியும். பயத்தினாலும், மனச் சிதைவாலும் உண்டாகும் ஏவல், வைப்பு, பில்லி, சூனியம், பேய், பிசாசு பிடித்தல் போன்ற அவஸ்தை துக்கங்களிலிருந்து விடுவிக்க வேல்மாறல் பாராயணம் கைகண்ட மருந்தாகும்.
வேல்மாறலை பக்தி, சிரத்தை, மன ஒருமைப்பாட்டுடன் குறைந்தது ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் விடாமல் தொடர்ந்து தினமும் காலையோ அல்லது மாலையோ ஒரு முறையாவது பாராயணம் செய்வது மிகவும் அவசியம். (வைத்தியர்கள் நோய்க்கு உரிய மருந்தை ஒரு மண்டலம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுவார்கள் அல்லவா? அம்முறையிலே வேல்மாறல் பாராயணத்தையும் தொடர்ந்து செய்ய வேண்டும்) இதனை ஆண், பெண் மற்றும் சாதிமத பேதம் இல்லாமல் யாவரும் பாராயணம் செய்யலாம். நோய், வாழ்க்கைச் சிக்கல் முதலான பிரச்னைகள் இல்லாதவர்கள்கூட இதனைப் பாராயணம் செய்வதால் மேலும் மன உறுதி மன மகிழ்ச்சி, மன நிறைவு உண்டாகும் என்பதில் ஐயமில்லை.
ஒரு மண்டல காலம் இதைப் பாராயணம் செய்து வேலாயுதத்தை வழிபட, சகல சௌபாக்கியங்களும் கை கூடும்; சத்ரு பயமும் தீவினைகளும் நீங்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்; சகலவிதமான உடற் பிணிகள் மட்டுமல்ல, மனப் பிணிகளும் அகன்று வாழ்க்கை சிறக்கும். அதிலும், கார்த்திகேயக் கடவுளாம் முருகனுக்கு உகந்த திருக்கார்த்திகை புண்ணிய மாதத்தில், வேல் மாறல் பாராயணம் செய்வது மிகுந்த விசேஷம்!
பாராயணம் முறை:
வேலுக்கு உகந்த வழிபாடுகளில் ஒன்று வேல்மாறல் பாராயணம்.
அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள திருவகுப்புகளுள் ‘மணி, மந்திரம், ஔஷதம்’ என்று பெரியோர்கள் குறிப்பிடும் மூன்று வகுப்புகள் முதன்மையானவை. அவை:
- சீர்பாத வகுப்பு – மணி வகுப்பு,
- தேவேந்திர சங்க வகுப்பு – மந்திர வகுப்பு,
- வேல் வகுப்பு – ஔஷத (மருந்து) வகுப்பு.
வேல் வகுப்பின் பதினாறு அடிகளை மேலும் கீழுமாகவும், முன்னும் பின்னுமாகவும் ஏறி இறங்கி வருவது போல் மாறி மாறி வர அமைத்து, அதனை நான்கு மடங்காக (16×4 = 64) அறுபத்து நான்கு அடிகளாக அமைய வைத்து, அந்த பாராயண முறையை ‘வேல்மாறல்’ என்று தொகுத்து அளித்தவர் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் ஆவார்.
6வது அடியாகிய ‘திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை விருத்தன் என (து) உள்ளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே’ என்ற வேல் மஹா மந்திர அடி முதலில் 12 முறையும், நிறைவில் 12 முறையும், நடுவில் 64 முறையும் ஆக மொத்தம் 88 முறை ஓதப்பெறுகிறது.
இந்த 16வது அடி எழுவாய் ஆக அமைய, முதல் பதினைந்து அடிகள் யாவும் பயனிலையாக வருமாறு 16ம் அடியை ஒவ்வொரு அடியிலும் சேர்த்துப் படித்தால் அந்த வரி முழுமை பெறுகிறது. இதுதான் இந்த வேல் வகுப்பின் அபூர்வ அமைப்பாகும்.
வேல் மாறல் மஹா மந்திரம்