ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகள்சித்தானைக்குட்டி சுவாமிகளினது வாழ்க்கை வரலாறு
சித்தானைக்குட்டி அவர்கள் இந்தியாவின் இராமநாதபுரத்தின் சிற்றரசரின் மகனாக அவதரித்தார். இவரது இளமைப் பெயர் ‘கோவிந்தசாமி’ ஆகும். இவ்ராச்சியத்தில் ஏற்பட்ட பயங்கரத் தொற்று நோயினால் தனியாகவும், குடும்பத்துடனும் பலர் மாண்டனர். இக்கால கட்டத்தில் இரு மகான்கள் நோயினை தாமே ஏற்று பணியாற்றலாயினர். இப்புதுமையினை அறிந்த சிற்றரசன் மகான்களை அழைத்து உபசாரம் செய்ய எண்ணம் கொண்டு, தனது மகனிடம் மகான்களை அழைத்து வருமாறு பணித்தான். தந்தையின் பணிப்பினை ஏற்று உடன் புறப்பட்ட கோவிந்தசாமி இல்லமெல்லாம் தேடி அலைந்து ஒர் குடிசையில் கண்டு இருவரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி நின்றார்.
மகான்கள் கோவிந்தசாமியை கட்டியணைத்து ஆசி வழங்கினர். உள்ளம் துறவறத்தினை நாடியதால் மகான்களுடன் இணைந்து நோயுற்ற மக்களுக்கு பணியாற்றலானார். பூர்வீகத்தொடர்பு ஈழம் நோக்கி ஈர்ந்திழுக்க தூத்துக்குடி சென்று கப்பலில் வருவதற்கான சீட்டினைப் பெறுவதற்கு அன்பர் ஒருவரை அனுப்பி வைத்தனர். இருவருக்கு மட்டுமே பிரயாணச் சீட்டு கிடைத்ததினால் கோவிந்தசாமியை அக்கரையில் விட்டுவிட்டு இரு மகான்களும் கப்பல் ஏறி கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்த போது கூடிநின்ற மக்கள் கூட்டத்தினுள் கோவிந்தசாமி நிற்பதை கண்ணுற்று தங்கள் சீடனிடம் பொதிந்திருந்த பக்குவ நிலையினை முன்னரே உணர்ந்திருந்ததினால் ஆச்சரியத்தினை காட்டிக் கொள்ளவில்லை. இச்செய்கை மூலம் சித்தராக பரிணமித்தார்கள்.
1920இன் முற்பகுதியிலிருந்து ஈழத்தின் மூலை முடுக்கெல்லாம் நடமாடித்திருந்து பித்தனாகவும், பேயனாகவும், கேலி பண்ணுவதற்குரியவராகவும் தன்னை வெளிக்காட்டி, உள்ளன்புடன் தன்னை நாடிவரும் அன்பர்களின் மனோநிலைக் கேற்ப அருளுரைகள், அற்புதங்கள் மூலம் மக்களை வழி நடத்தியவர் ஜீவ சித்தர் சித்தானைக்குட்டி சுவாமிகள் ஆகும். சுவாமிகள் காரைதீவில் தனக்கென ஆச்சிரமம் அமைத்து தங்கியிருந்தார்கள். நடையாகவும், மாட்டு வண்டிகளிலும் சுவாமிகளை தரிசிப்பதற்கு வருபவர்கள் ‘காவு’களில் உணவுப் பொருட்களையும், பிரியமான பண்டங்களையும் காணிக் கையாக வழங்குவார்கள். அவை அனைத்தும் தன்னை நாடிவரும் அடியார்கக்;கு பகிர்ந்தளிப்பார்கள்.
சுவாமி அவர்கள் ஆடாதசித்தே இல்லை என்கின்ற அளவிற்கு பல இடங்களில் தனது சித்து விளையாட்டை ஆடியிருக்கின்றார்கள். அவற்றுள் சில ‘கதிர்காமத்தில் முருகப்பெருமானல் அமிர்தத்துளி கிடைக்கப் பெற்றமை, சாண்டோ சங்கரதாஸை இரும்பரசனாக புகழ் பரவச்செய்தமை, கடலின் மேலால் நடந்த அதிசயம், கல்முனை சந்தியிலிருந்து கதிர்காமத்தில் தீப்பிடித்த திரைச்சீலையை அணைத்த பெருந்தகை, கதிர்காமத் திருவிழாக் காட்சியை தனது உள்ளங்கையில் காண்பித்த மகான்,
நஞ்சு ஊட்டப்பட்டும், தீயிட்டு எரித்த போதும் மீண்டும் எழுந்து நின்று சித்தாடிய சித்தர் அவர்கள் ‘1951ஆம் ஆண்டு ஆடித்திங்கள் சுவாதி நட்சத்திர தினத்தன்று சமாதி நிலையை எய்தினார்கள்’. இச்செய்தியினை கேள்வியுற்ற பக்த அடியார்கள் நாலா திசைகளிலிருந்தும் காரைதீவு ஆச்சிரமத்தில் ஒன்று கூடினர். ‘சித்தர் சேவா சங்கம்’ அமைக்கப்பட்டு சமாதி வைப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டது.
தான் சமாதியான பின் ‘தனது அடி வயிற்றிலிருந்து இரத்தம் பெருகு’மென்றும் அதன் பின்னரே சமாதி வைக்க வேண்டும் என்று ஏற்கனவே சுவாமி அவர்கள் கூறியிருந்தார்கள். சுவாமி அவர்கள் கூறியிருந்ததிற்கமைய மூன்றாம் நாள் அடி வயிற்றிலிருந்து இரத்தம் பெருகியது. ஒரு யார் கன பரிமாணத்தில் குழியமைத்து நான்காம் நாள் பக்தர்களின் ஆராதனையுடன் சுவாமி அவர்கள் ‘சமாதி’ வைக்கப்பட்டார்.
பொது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிருவாக சபையினரால் சமாதி ஆலயம் வழிநடத்தப்பட்டு வருகின்றது. இச்சபை வருடாவருடம் மீளமைக்கப்படுவது வழமையாகும். 1985, 1987, 1990 காலப்பகுதியில் ஏற்பட்ட வன்செயல் காரணமாக இவ்வாலயம் சேதமாக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தால் அன்னதானமடம், காளியம்மன், முருகன், பிள்ளையார் ஆலயங்கள் உட்பட சுற்றுமதில், அசைவுள்ள அனைத்து உடமைகளும் முற்றாக அழிக்கப்பட்டது. தற்பொழுது இவ்வாலயம் பொதுமக்களின் பங்களிப்புடனும், இந்து கலாசார அமைச்சின் உதவியுடனும் புனரமைக்கப்பட்டு வருகின்றது.
ஜீவ சித்தர் சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் குரு பூசையும், அன்னதானமும் வருடந்தோரும் தமிழுக்கு ஆடித்திங்கள் சுவாதி நட்சத்தர தினத்தன்று பயபக்தியுடன் குருவருளால் சிறப்பாக நடைபெறுகின்றது. உள்ளுர், வெளியூர் அன்பர்கள் இத்தினத்தில் நிறைந்து காணப்படுவர். இவ்வாலயத்தில் அறநெறி வகுப்பு, வெள்ளி கிழமை தோறும் கூட்டுப் பிரார்த்தனை, விசேட தினங்களில் பூசைகள் நடைபெற்று வருகின்றது. சுவாமிகள் சமாதி அடைவதற்கு முன்னர் ஆடிய சித்துக்கள் போல் சமாதிநிலை அடைந்த பின்னரும் இவ்விடத்தில் சித்துக்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றது.